பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டிரெயில்மறியல் செய்ய முயன்ற த.மு.மு.க.வினர் 1,300 பேர் கைது, கடைகள் அடைப்பு
ராமநாதபுரம்,டிச.7-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற த.மு.மு.க.வினர் 1,300 பேர் கைது செய்யப்பட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன.
ரெயில் மறியல்:
ராமநாதபுரத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்கள் மற்றும் வேன்களில் ஏராளமான த.மு.மு.க.வினர் ராமநாதபுரத்தில் திரண்டனர். பின்னர் உழவர் சந்தை அருகே மாவட்ட த.மு.மு.க. அலுவலகம் முன்பாக வடக்கு மாவட்ட தலைர் சாதிக் தலைமையில் கண்டன கூட்டம் நடந்தது. இதில் தமாம் மண்டல துணை தலைவர் அலாவுதீன் பாகவி, மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் ஆகியோர் பேசினர்.
இதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்டித்தர வேண்டும். கரசேவை போல முஸ்லிம்களும் அயோத்தி சென்று பாபர் மசூதியை கட்ட முயற்சி செய்வோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் த.மு.மு.க. மாவட்ட தலைவர் சலீமுல்லா கான், மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, மாவட்ட பொருளாளர் சல்மான், துணைத்தலைவர் ஹுமாயுன்கபீர், துணை செயலாளர் ரசூல்கான், ஒன்றிய செயலாளர் ருகைபு, செய்தி தொடர்பாளர் சாகுல், மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கர் உள்பட 500க்கும் மேற்பட்ட த.மு.மு.க.நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் மறியல் செய்ய ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அதையறிந்த போலீசார் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு அவர்களை வழி மறித்து 801 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று ராமநாதபுரத்தில் பெரும்பாலான முஸ்லிம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பரமக்குடி:
பரமக்குடியில் தெற்கு மாவட்ட த.மு.மு.க. சார்பில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், அபிராமம், பார்த்திபனூர், பெரியபட்டினம், திருப்புல்லாணி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த த.மு.மு.க. வினர் பரமக்குடி காந்தி சிலையில் திரண்டு தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் சம்சுதீன் சேட், இஸ்லாமிய பிரச்சார பேரவை பொறுப்பாளர் வாணி சித்தீக், த.மு.மு.க. மாநில பேச்சாளர் மிட்பாவுல்கீதா ஆகியோர் தலைமையில் பரமக்குடி நகர் தலைவர் சாதிக்பாட்ஷா, செயலாளர் முகமது இஸ்மாயில், நிர்வாகிகள் அப்பாஸ், செய்யது இபுராகிம், மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், மாவட்ட பொருளாளர் சாதிக் பாட்ஷா, மத்திய சங்க பொருளாளர் சல்மான், மாவட்ட துணை செயலாளர் பெரியபட்டிணம் சாகுல், ஒன்றிய செயலாளர்கள் கலிமுல்லா, இப்ராகிம், பாவா ராவுத்தர் உள்பட பரமக்குடி, எமனேசுவரம் மற்றும் அனைத்து கிளைக்கழக நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
கைது:
ஊர்வலம் ஆர்ச் பகுதிக்கு வந்த போது தாசில்தார்கள் நாக ஜோதி, ரங்கன், துணை தாசில்தார் ராஜலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் காந்தி, கோவிந்தன் பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெருமாள் தலைமையில் ஏராளமான போலீசார் தடுத்து 507 பேரை கைது செய்தனர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.