செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இலங்கை கடற்படை அட்டூழியத்தை தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பிரதமருக்கு கடிதம்



மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரும் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து சிங்கள பேரினவாத கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனைக் குரியதாகும். இலங்கை கடற்படையினர் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர். 5 படகுகளையும், அவற்றில் இருந்த அந்தோணி, ஜோசப், அல்போன்ஸ் உள்பட 24 மீனவர்களையும் தாக்கி அவர்களை கைது செய்து இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து தமிழக மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் செல்லும் நேரத்தில் இலங்கை கடற்படையின் போர் கப்பல்கள் கச்சதீவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தமிழக மீனவர்களை மட்டும் அல்ல இந்தியாவையே அச்சுறுத்தும் செயலாக உள்ளது. இது குறித்து இந்திய அரசு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு தலையிட்டு கைது செய்யபட்ட 24 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகின்றேன். மேலும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த பலமான நடவடிக்கைகளை எடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.