காரைக்கால்: ரமலான் மாதம் முழுவதும், சஹர் நேரத்தில், அதிகாலை 3 முதல் 5 மணிவரை குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என காரைக்கால் மாவட்ட தமுமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, காரைக்கால் மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
"இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். அவ்வாறு நோன்பு இருக்கும் 30 நாட்களும், அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள், குளித்து, சஹர் உணவு சமைத்து, நோன்பு துவக்குவார்கள். அந்த நேரத்தில், மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் அதிமுக்கியமாகும்.
எனவே, அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காரைக்கால், திருநள்ளாறு, திரு-பட்டினம், நிரவி, கருக்கன்குடி, நல்லம்பல், சேத்தூர், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை தடையில்லாமல் வழங்க ஆவணம் செய்யவேண்டும்". இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.