திங்கள், 14 ஜூலை, 2014

இலங்கை மீதான ஐ.நா. விசாரணை; இந்தியா ஆதரிக்காது: இந்திய வெளியுறவுத்துறை!

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூக்கும் இடையில் புதுடில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதா என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்துள்ள அவர், ”ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது” என்றுள்ளார்.