திங்கள், 6 மே, 2013

கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் மாற்றமா? - சட்டமன்றத்தில் மமக முழக்கம்





முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஹிந்து கோயில்கள் நடக்கும் திருமணங்களை, கோயில் நிர்வாகம் வழங்கும் சான்றிதழைக் கொண்டு பதிவு செய்ய முடிகிறது. அதுபோல தமிழக அரசின் தலைமைக் ஹாஜியால் நியமனம் செய்யப்பட்டவர்கள் மூலம் நடக்கும் திருமணங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.
அவருக்கு பதிலளித்து அமைச்சர் பி.வி. ரமணா பேசியபோது, ’’2009-ம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 24-11-2009 முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். திருமணங்களைப் பதிவு செய்ய ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்து இருக்க வேண்டும். அதற்கான அங்கீகரிக்கப்பட்ட வயதுச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே திருமணங்களை பதிவு செய்ய முடியும்.

இந்த கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.