இலங்கை பல மோசமான விடியல்களைக் கண்டிருக்கிறது. அதுவும், மதவாதமும், இனவாதமும் சேர்ந்து மக்களையும், உடமைகளையும், உரிமைகளையும் வேட்டையாடிய விடியல்களைக் கண்டிருக்கிறது. அப்படியான அசம்பாவீதத்தின் வடுக்களோடு விடிந்த மற்றொரு காலையிலேயே இன்றைய ‘எமது பார்வையில்’ பகுதியை எழுத வேண்டிய ஏற்பட்டிருக்கிறது.
மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் குறிப்பிடளவில் வாழும் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்த மோதல்கள் கலவரமாக மாறி சில உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பல வீடுகளும், 10க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அதன் கொந்தளிப்பு கொழும்பின் தெஹிவளையில் இருக்கும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மருந்தகத்தை குண்டர் குழுவொன்று அடித்து உடைத்து தீவைக்கும் அளவுக்கு சென்றது.
பொது பல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பு பொலிஸாரின் அனுமதியோடு அளுத்கம பகுதியில் நேற்று மாலை ஊர்வலத்தினையும், கூட்டத்தினையும் நடத்தியது. அதன்போதே, பொது பல சேனாவினருக்கும், அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது. இதன்போது,, வெளியிடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்கள் அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
“விலை குறைவாக கிடைக்கின்றது என்பதற்காக, முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூளை இல்லை. இருந்திருந்தால், முஸ்லிம் ஒருவருக்கு நீதியமைச்சைக் கொடுத்திருப்பாரா?” என்று நேற்றைய கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டிருக்கிறார்.
பொது பல சேனாவும், செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரும் அரசின் ஆதரவோடு இயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல தரப்பினாலும் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் பின்பற்றும் ஹலால் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தியதன் மூலம் பொது பல சேனா பல தளங்களினதும் கவனத்துக்கு வந்தது. அப்போது அந்த அமைப்பின் அலுவலகமொன்றை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைத்திருந்தார்.
முஸ்லிம்களை பிரதான இலக்காகவும், மற்றைய சிறுபான்மை மதங்களான இந்து, கிறிஸ்தவர்களை பகுதி இலக்காகவும் கொண்டே பொது பல சேனா தன்னுடைய செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. அந்தச் செயற்திட்டங்களை சிறுபான்மையினரை அதிகம் கோபத்துக்குள்ளாக்கும் செயற்பாடுகளாகவே இருந்து வருகிறது. பல நேரங்களின் பொலிஸாரை மீறிய அதிகாரத்தைப் பெற்றவர்கள் போல செயற்படுகின்றார்கள். அண்மையில் கூட ஜாதிக பல சேனா என்ற அமைப்பு கொழும்பில் நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை பலவந்தமாக உள்நுழைந்து பொது பல சேனாவின் பிக்குகள் நிறுத்தியிருந்தனர்.
அடிப்படையில் பொது பல சேனா, பௌத்த மதத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதே தன்னுடைய இலக்கு என்று கூறிக்கொள்கிறது. ஆனால், அதன் உள்நோக்கங்கள் அல்லது செயற்பாடுகள் மிகமோசமான விளைவுகளை நாட்டில் மீண்டும் ஏற்படுத்தி விடக் கூடும் என்கிற அளவிலேயே இருக்கின்றது.
முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் அளுத்கம பகுதில் கூட்டமொன்றை நடத்தி, அங்கு வைத்து முஸ்லிம்களின் அழிவு தொடங்கிவிட்டது என்பது மாதிரியான கருத்துக்களை கலபொட அத்தே ஞானசார தேரர் வெளியிடுகிறார். இது, என்ன மாதிரியான கொந்தளிப்பை முஸ்லிம் சமூகத்தினரிடையே ஏற்படுத்தும்? அதன் விளைவுகள் தெரிந்த நிலையிலேயே இவ்வாறான செயற்பாடுகளை பொது பல சேனா முன்னெடுக்கின்றது என்று நம்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மத அடிப்படைவாதம் எல்லாத் தரப்பிற்குள்ளும் புற்றுப்போல பெருகிக் கொண்டேயிருக்கிறது. அதில், பெரும்புற்றுக்கள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான பொது பல சேனாவின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதுவும், இலங்கையின் பிரதான அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இப்போது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாகவே இருக்கின்றன. அதிக தருணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சர்வதேச ரீதியாக முஸ்லிம் நாடுகளே காப்பாற்றுகின்றன. இவ்வாறான நிலை இருக்கின்ற போதிலும், இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
“எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன். எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா?“ என்று அளுத்கம பிரதேசத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.
அளுத்கம- பேருவளைப் பகுதியில் கலவரம் இடம்பெற்றவேளை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லை. ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லை. இவ்வாறான நிலையிலேயே கலவரம் இடம்பெற்றிருக்கிறது. இது, திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகமும் எழுகிறது.
இதனிடையே, G77 மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய கலவரங்கள் பற்றி தன்னுடைய உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில், ”சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தண்டனையை வழங்குவதற்காக விசாரணை ஒன்று இடம்பெறும்“ என்று எழுதியிருக்கிறார்.
இலங்கையில் சிறுபான்மையின மக்கள் தமது பிரதிநிதிகளை ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நம்பிக்கையில் தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் ஒன்றில் முற்றாக அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு அடிமைகளாக வலம் வருகிறார்கள். இல்லை, எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். அப்போதும், சரியான அரசியலைச் செய்வதில் தெம்பின்றி இருக்கிறார்கள்.
நாட்டின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு இனப்பிரச்சினையோ, மதப்பிரச்சினையோ தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலையும் கட்சிகள் அந்த விடயத்தை முன்னிறுத்தியே அணுகுகின்றன. இந்த நிலையில், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இன ரீதியிலான அல்லது மத ரீதியிலான உணர்ச்சி வசப்படுதல்களை முன்னிறுத்த வேண்டிய தேவை அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அதன், பிரதிபலிப்பாகவே பொது பல சேனா போன்ற அடிப்படைவாத அமைப்புக்களின் எழுச்சியையும், அதற்கான ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும் காண வேண்டியிருக்கிறது!