புதன், 18 ஜூன், 2014

ஈரோட்டில் பாஜகவுக்கு எதிராக உதயமாகியுள்ள மோடி பேரவை- அடிதடி, அலுவலகம் உடைப்பு


ஈரோடு: ஈரோட்டில் பாஜகவினருக்கும், பிரதமர் நரேந்திரமோடி பெயரில் 'மோடி பேரவை' என்ற அமைப்பு நடத்திய கோஷ்டிக்கும் நடுவே தகராறு முற்றியுள்ளது. மோடி பேரவை அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டடது. ஈரோட்டில் மோடி பேரவை என்ற பெயரில் அமைப்பு தொடங்கியுள்ள சிலர், பாஜக சின்னமான தாமரை, பிரதமர் மோடியின் உருவப்படங்களை பயன்படுத்திவருகின்றனர். இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்னர் உள்ளூர் பா.ஜனதாவினர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், சிலர் பா.ஜனதாவின் பெயரை தவறாக பயன்படுத்தி நிதி வசூலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் பா.ஜனதா உறுப்பினர்கள் அல்ல என்றும், பா.ஜனதா மாநில தலைமையிடமிருந்தோ அல்லது தேசிய தலைமையிடமிருந்தோ எவ்வித முன் அனுமதியும் பெறாமல் கட்சியின் சின்னத்தையும், பிரதமர் மோடியின் பெயரையும் தவறாக பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில், 'மோடி பேரவை'யின் அலுவலகத்திற்குள் சிலர் புகுந்து அங்குள்ள ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் பா.ஜனதாவினர்தான் என்று கூறப்படுகிறது. இதேபோல மோடி பேரவையை சேர்ந்தவர்கள் வேன் ஒன்றில் சென்றபோது அவர்கள் வழிமறிக்கப்பட்டு கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கப்பட்டதாகவும், இருப்பினும் டிரைவர் சாமர்த்தியத்தால் அவர்கள் தப்பியதாகவும் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவங்களால் ஈரோடு பாஜக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.