புதன், 18 ஜூன், 2014

முஸ்லிம்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்

மோதல்கள் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அளுத்கம, பேருவளைக் கலவரங்கள் வெளிப்படுத்துவதாகவும், அந்த தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் கண்டனம் தெரிவித்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் நசுக்கும் நோக்குடன் அளுத்கம, பேருவளை, களுத்துறை பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகவும், ரெலோ அமைப்பு சார்பாகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இச் சம்பவத்தினை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது முஸ்லிம் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவத்தின் பின்னணியில் பொதுபலசேனா மட்டுமல்ல, அரசுக்கும் தொடர்பு இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும்கூட முஸ்லிம்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது சாதாரண விடயமல்ல. இலங்கையில் பொலிஸ் பிரிவும் இராணுவமும் என்ன செய்கின்றது?
பயங்கரவாதத்தை முறியடித்ததாக மார் தட்டிக் கொள்ளும் அரசும் அரச படைகளும் வன்முறைச் சம்பத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றார்களா? அல்லது வன்முறையின் பின்புலத்தில் இருந்து செயற்படுகின்றார்களா என்பதை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியாக தமது உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதையே இது வெளிப்படுத்தியுள்ளது.
எனவே தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி எமது உரிமைக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குள் ஒரு பலம் அமையும் போதே எங்களை இன்னொருவர் அச்சுறுத்தும் நிலையை நாங்கள் இல்லாமல் செய்யமுடியும்.
இந்த சம்பவம் அளுத்கமையுடன் முடிவடையும் என்று கருதிவிட முடியாது. கடந்த காலத்தில் இந்த நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கி நீதி கேட்க தயாராகவுள்ளது. எனவே முஸ்லிம் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக தெரிவித்து அரசுக்கு முண்டு கொடுத்து பாராளுமன்ற கதிரைகளை சூடேற்றும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TM