ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மர்ம நபர்கள்
தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம், கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில்
முஸ்லிம்கள் தொழுகை தொழுவதற்கான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இங்கு நேற்று
இரவு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பள்ளிவாசலில் இருந்த
தொப்பிகள், பாய்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் அங்கு இருந்த
மின்விசிறிகளும் சேதமாயின.
இன்று காலையில் தொழுகை நடத்த சென்ற முஸ்லீம்கள் இதனை கண்டு
அதிர்சியடைந்தனர். மர்ம நபர்களின் இந்த செயலை கண்டித்தும், பள்ளிவாசல் மீது
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் ஆர்ப்பாட்டம்
நடத்தினர். கேணிக்கரை சந்திப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி. அமைப்பினர் திரளாக
பங்கேற்றனர்.
சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி மயில்வாகணன் ‘‘பள்ளி
வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு காம்பவுண்ட் சுவர் உள்ளது. அத்துடன் இரவு
நேர காவலாளியும் உள்ளார். அப்படி இருக்கும் போது இதுபோன்ற சம்பவம் எப்படி
நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
பள்ளிவாசலுக்கு தீவைத்த மர்மநபர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்''
என்றும் எஸ்.பி கூறினார். பள்ளிவாசலுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம்
ராமநாதபுரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.