சனி, 13 ஜூலை, 2013

புத்தகயா குண்டு வெடிப்பு - புத்த துறவிகளுக்கு தொடர்பு?



பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில் கடந்த வாரம் அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. மகாபோதி கோயில் மைதானத்தில் 4 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. 

யுனேஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியன் முஜாகுதீன் பொருப்பேற்றிருந்தாலும், அதற்கான ஆதரங்கள் சிக்கவில்லை மேலும் முரணான சில யூகங்கள் கிளம்பியுள்ளது. 

புத்தர் கோவிலில் வெடிக்காமல் கிடந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறிய ரக சிலிண்டரில் அம்மோனியம் நைட்ரேட், சல்பர் மற்றும் வெடிமருந்து கலவைகளால் அந்த டைம்- பாம்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது உருது மொழியில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. 

மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் இந்த தொடர் குண்டு வெடிப்பை நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து டூவிட்டர் இணையத் தளத்தில் போடப்பட்ட தகவல்களால் இந்த சந்தேகம் அதிகரித்தது. 

என்றாலும் இந்தியன் முஜாகிதீன்கள்தான் குண்டு வெடிப்பை நடத்தினார்கள் என்பதற்கு இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கோ, போலீசாருக்கோ கிடைக்கவில்லை. குண்டு வெடித்த மறுநாளே போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்தனர். 

ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று தெரிய வந்ததால் விடுவிக்கப்பட்டனர். தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வு மற்றும் கண்காணிப்பு காமிரா காட்சிகளால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் விசாரணை அடுத்தக் கட்டத்துக்கு நகராமல் உள்ளது. 

இந்த நிலையில் புத்தர் கோவிலுக்குள் இருப்பவர்கள் உதவி இல்லாமல் இந்த குண்டு வெடிப்பை நடத்தி இருக்க முடியாது என்று முடிவுக்கு தேசிய புலனாய்வு பிரிவினர் வந்துள்ளனர். கோவிலுக்குள் வைக்கப்பட்ட 13 குண்டுகளும் 6-ந் தேதி இரவு தான் எடுத்து வந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த காட்சிகள் எந்த ஒரு கண்காணிப்பு காமிராவிலும் பதிவாகவில்லை. எனவே புத்த துறவிகளில் யாரோ ஒருவர்தான் குண்டுகளை வைக்க மர்ம நபர்களை காமிரா கண்ணில் படாமல் அழைத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு போதும் நாச வேலைக்கு இப்படி சக்தி குறைந்த குண்டுகளை பயன்படுத்தியதே இல்லை. மேலும் 13 குண்டுகளும் ஒரே நேரத்தில் அதிகாலை 5.30 மணிக்கு வெடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 நிமிட இடைவெளியில் தான் குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். 

இதன் மூலம் அதிக சேதம் ஏற்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மகாபோதி புத்தர் கோவிலை நிர்வகிப்பது யார் என்பதில் புத்த துறவிகளிடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு உள்ளது. 

எனவே கோவில் நிர்வாகத்தை குறி வைத்து உள்ளே இருக்கும் புத்த துறவிகளே குண்டு வெடிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவினர் தொடங்கியுள்ளனர். 

Adaderana