இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.எ. கீழக்கரை நகராட்சியில் அதிரடி ஆய்வு:
21.06.2031 வெள்ளிக்கிழமை மாலை ஜவாஹிருல்லா எம்.எல்.எ கீழக்கரையில் திடீர் ஆய்வு மேற்கொன்டார். கீழக்கரை நகராட்சியின் வள்ளல் சீதக்காதி சாலை, கலங்கரை விளக்கம் பகுதி, குத்பா பள்ளிவாசல் தெரு, ஜின்னா தெரு, மேலதெரு, பண்ணாட்டார் தெரு போன்ற பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் உட்பட அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். தெருவோர கழிவு நீர் கால்வாய்கள் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் இருப்பது, குப்பைகள் கொட்ட போதிய தொட்டிகள் இல்லாமல் இருப்பது, வெள்ளிக்கிழமைகளில் கழிவு நீர் சாலைகளில் ஆறாக ஓடுவது, தெருவிளக்குகள் சில இடங்களில் சரியாக இல்லை போன்ற குறைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். உடனுக்குடன் நகராட்சி அதிகாரிகளிடம் எம்.எல்.எ விளக்கம் கேட்டு உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆங்காங்கே பெருமளவு மக்கள் திரண்டு வந்து எம்.எல்.எ விடம் கோரிக்கைகளை கூறினார்கள். பின்னர் நகராட்சி அலுவலகம் சென்று நகராட்சி கவுன்சிலர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். நகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆணையாளரிடம் கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.பொதுமக்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்திட கால அவகாசம் குறித்து ஆணையாளரிடம் கேட்டார் ஜூலை 15க்குள் நிவர்த்தி செய்வதாக ஆணையாளர் உறுதி அளித்தார். அதன்பின் அங்கு வந்த செய்தியாளர்களிடம் எம்.எல்.எ பேசினார். இந்த அதிரடி ஆய்வின் போது மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் அன்வர் அலி, கீழக்கரை நகர் தலைவர் சிராஜுதீன், நகர் துணை தலைவர் கவுஸ் முகைதீன், நகர் நிர்வாகி சாதிக், இஞ்சினியர் நசீர், கீழை இர்பான், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ரயிஸ் இப்ராஹிம், உள்ளிட்ட த.மு.மு.க.,ம.ம.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆய்வின்போது கீழக்கரை நகர் நல ஆர்வலர்கள் தங்கம் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் முகைதீன், போன்றவர்களும், செய்தியாளர்களும் உடனிருந்தனர்.