ராஜபாளையம்: ''இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்தை, மத்திய அமைச்சர் நாராயணசாமி பிரதிபலிக்கிறார்'' என மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தற்போது உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடை உயர்த்த வேண்டும். திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள ஆட்சேபணைகளை சட்டத் திருத்தமாக கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி ஊர்வலம் நடத்த உள்ளோம். கூடங்குளம் அணுஉலையில் தரமற்ற 'வால்வு' கள் சப்ளை செய்ததாக ரஷ்ய நிறுவனத்தினர் மீது அந்நாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. கடல் எல்லையை தாண்டுபவர்கள் மீது தாக்குதல் நடத்த உலகளாவிய கடற்சட்டத்தில் இடமில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசின் இலங்கை ஆதரவு நிலைப்பாடுதான் காரணம். புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டபோது ''இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்தின் கோரிக்கையால் அந்நாட்டு படையினர் தாக்கினர்'' என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியது கண்டிக்கத்தக்கது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை அவர் பிரதிபலிக்கிறார். தமிழகத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக மத்திய அரசு வழங்கவேண்டும் என்றார். மாநில அமைப்பு செயலாளர்கள் முகமது மைதீன் உலவி செல்லச்சாமி மாவட்ட செயலாளர் அஜ்மீர் உடன் இருந்தனர்.
(தினமலர்)