புதன், 17 ஏப்ரல், 2013

மாவட்டந்தோறும் அரசு கல்வியியல் கல்லூரிகள் தொடங்கப்படவேண்டும்: சட்டபேரவையில் மமக கோரிக்கை

10.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்


முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உயர் கல்வியிலே அரசாங்கத்தினுடைய பங்களிப்பு கணிசமான அளவுக்க உயர்ந்து வருகிறது. அதற்கான அறிவிப்புகளையெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையிலே மாண்புமிகு அமைச்சர் அவர்களும் செய்தார்கள்.

அமைச்சர் அவர்கள் சொன்னது போல் தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிதான இருக்கின்றன. அதில் வசூலிக்கப்படக்கூடிய கல்விக் கட்டணத்திற்கும், சுயநிதிப் கல்வியில் கல்லூரியிலே வசூலிக்கப்படக்கூடிய கல்விக் கட்டணத்திற்குமிடையயே மிகப் பெரிய இடைவெளி இருக்கக்கூடிய சூழ்நிலையில், அரசாங்கத்தினுடைய கவனம் இந்த விஷயத்திலே சற்று கூடுதலாகி மாவட்டந்தோறும் அரசு கல்வியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு இந்த அரசு முன்வருமா? அப்படி வரும்பொழுது அரசு கல்வியியல் கல்லூரி இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு கல்லூரி கட்டுவதற்கு இந்த அரசு முன்வருமா என்று தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பி. பழனியப்பன் (உயர்கல்வித் துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் தமிழ்நாட்டில் 706 மொத்த கல்வியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றைப் பொறுத்தவரையில் அரசு கல்வியியல் கல்லூரிகள் 7 என்று சொன்னேன் அதில் மாணவர்களுக்கு 1169 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1818 இடங்கள் தனியார் கல்லூரிகளில் 68157 இடங்கள் இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 69144 மாணவர்கள் கல்வியில் கல்வி பயிலுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கட்டணத்தைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள் ஏற்கெனவே நம்முடைய தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சிக்கு முன்பு தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது 1 லட்சம், 70000 மற்றும் 60000 என அங்கே கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள்கூட இங்கே சட்டமன்றத்தில் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றை அறிந்துதான் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஆணை வழங்கியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேதான், நான் ஏற்கெனவே அவையில் தெரிவித்ததுபோல், ஓய்வுபெற்ற நீதிபதி திரு. பாலசுப்பிரமணியன் அவர்க தலையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்தக் கமிட்டியானது அந்தக் கல்வியில் கல்லூரிகளிடமிருந்து எந்தவகையில் அவர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டுமென்று மனுக்கள் பெற்றும் மாணவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டும், ஆய்ந்து கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறார்கள், அதனுடைய அடிப்படையிலேதான் தரச் சான்றிதழ் பெற்ற கல்லூரிக்கு 46500 எனவும் தரச் சான்றிதழ் இல்லாத கல்லூரிகளில் 41500 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டணத்தைப் பொறுத்தவரை அரசு நிர்ணயிக்கவில்லை அதற்குரிய கல்விக் கட்டணக் குழுதான் நிர்ணயிக்கிறது. நம்முடைய மாணவர்களைப் பொறுத்தவரை அதிகமாக கல்வியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயில்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதுபோல், எங்கெங்கெல்லாம் இதுபோன்ற கல்வியியல் கல்லூரிகள் அரசாங்கத்தின்மூலம் தொடங்கப்படவேண்டுமோ, அங்கு துவங்குவதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச்சென்று, ஆலோசிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.