படித்ததில் பிடித்து என்ற வரிசையில்
மனிதனேயம் உள்ள மார்கஸ் அவர்களின் கட்டுரையை அப்படியே தந்துயுள்ளேன்.நாம்
சொல்வதைவிட சகோதரர் மார்க்ஸ் சரியாக சொல்லியுள்ளார்...
ஒரு ஜனநாயக அரசமைப்பில் சட்டமன்றம்மற்றும் நாடாளுமன்றங்களின் பங்கு மிக மிக முக்கியமானது. வெறுமனே சட்டங்களை இயற்றுவது மட்டும் அதன் பணி அல்ல. சட்டம் இயற்றுதல், மக்களின் குறைகளைத் தீர்த்தல், தேசிய மற்றும்சமூக அளவிலான மோதல்களுக்குத் தீர்வு காணுதல் (conflict resolution) எனச் சுமார் இருபதுபணிகள் அதற்கு உண்டு என்பர்.
ஆளும் கட்சியும் அதனால் அமைக்கப்பட்ட அமைச்சரவையும்தான்ஆட்சி செய்கின்றன என்றபோதிலும் ஒரு ஜனநாயக ஆட்சி முறையில் அரசுகளைச் சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் கட்டுப்படுத்துகின்றன.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின்ஆட்சி என்பது மட்டுமல்ல. சிறுபான்மை தனது கருத்துக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும்,பிரச்சாரம் செய்வதற்கும், செயல்படுத்துவதற்குமான சாத்தியங்களும் உரிமைகளும் சேர்ந்ததேஜனநாயகம். அந்த வகையில் அரசின் திட்டங்களில் தலையிடுவதும், கருத்துத் தெரிவிப்பதும்,விமர்சிப்பதும், இவற்றினூடாக அத் திட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்வதும் கொள்கையளவில்ஜனநாயகத்தில் சாத்தியம். அதைச் சாத்தியப்படுத்தும் முக்கிய நிறுவனங்களாகச் சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் நிலவுகின்றன.
அந்த வகையில் சட்டமன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்களின் பங்கு முக்கியமானது. அதற்குரிய வகையில் அவர்கள் திறனும் ஆளுமையும்மிக்கவர்களாக இருத்தல் அவசியம், இம் மன்றங்களில் அவர்கள் ஆற்றக்கூடிய உரைகளில் ஆழமும்கருத்துச் செறிவும் மட்டும் முக்கியமல்ல. எதிராளியையும் தம் கருத்திலுள்ள நியாயங்களைஏற்கச் செய்யும் தர்க்க மற்றும் வாதத் திறன்களும் முக்கியம். நறுக்குத் தெரித்தாற்போலும்,நகைச்சுவைத் திறனுடனும், மிக்க சமயோசித்துடனும் மக்கள் மன்ற விவாதங்களில் ஒளியூட்டியவர்கள்இந்திய, தமிழக மாமன்ற வரலாற்றில் பலருண்டு. ராம்மனோகர் லோகியா, இந்திரஜித் குப்தா,புபேஷ் குப்தா, பிலு மோடி, தாராகேஸ்வரி சின்ஹா, ராஜாஜி, கே.டி.கே. தங்கமணி, சி.என்.அண்ணாதுரை,கிருபளானி என இந்த வரிசையில் பலரைச் சொல்ல இயலும்.
புகழ்பெற்ற
நாடாளுமன்றப் பேச்சுகள்குறித்த நூல்களைப் புரட்டினால் அவற்றில் லாயிட்
ஜார்ஜ், வின்சென்ட் சர்ச்சில், ஜியாஃப்ரேஹோ முதலோனோர் மிகவும் நெருக்கடியான
சந்தர்ப்ப்ங்களை எவ்வாறு கையாண்டுள்ளார்கள் என்பதுவிளங்கும். ஜவஹர்லால்
நேருவின் புகழ்பெற்ற “Tryst with Destiny” உரையும், டாக்டர்
அம்பேத்கர்அரசியல் சட்ட அவையில் ஆற்றிய இறுதி உரையும் இந்த வரிசையில்
குறிப்பிடத் தக்கன.
ஆனால் இன்று சட்டமன்றங்களும் நாடாளுமன்றங்களும்இந்த அற்புதமான பாரம்பரியங்களை இழந்து வெட்டிப் பேச்சு மடங்களாகவும், அதிகாரத்திலுள்ளவர்களின்புகழைப்பாடித் தெண்டனிடும் கொட்டரங்களாகவும் மாறிவிட்டன. தேர்ந்த அரசியலறிவும், கண்ணியமும்மிக்க உறுப்பினர்களால் நிரம்பியிருந்த இந்த அவைகளை இன்று ஒவ்வொரு கட்சியும் பெரிய அளவில்கிரிமினல்களைக் கொண்டு நிரப்புகின்றன.
இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. ஆபாசமாகப்பேசுவது, ஆபாசச் சைகைகளைக் காட்டி மிரட்டுவது, ஆபாசப் படங்களைச் செல்போனில் பார்த்துரசித்துக் கொண்டிருப்பது என்பதெல்லாம் இன்று இந்த மாமன்றங்களில் சகஜமாகிவிட்டன. நாடாளுமன்றஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சருக்குச் சமமாக மதிக்கப்படுபவர். அத்தகையஎதிக்கட்சித் தலைவர் ஐந்தாண்டு காலமும் சட்டமன்றத்தையே மிதிக்காத வரலாறுகள் தமிழகத்தில்மட்டுமே உண்டு.
இந்திய நாடாளுமன்றச் செயல்பாடுகள்குறித்து மிக விரிவாக ஆய்வுகளைச் செய்துள்ள
டாக்டர்
சுபாஷ் காஷ்யப், முன்னெல்லாம் நாடாளுமன்றநேரத்தில் 49 சதம் சட்ட
உருவாக்கத்தில் செலவிடப்பட்டது எனவும், இது இப்போது 13
சதமாகக்குறைந்துள்ளது எனவும் குறிப்பிடுகிறார், யாரும் சட்ட மசோதாக்களை
ஆழமாகப் படித்து விவாதிப்பதில்லை.கடந்த 30 ஆண்டுகளில் ஒரு தனி நபர் மசோதா
கூட நிறைவேற்றப்படவில்லை என்கிறார் காஷ்யப்.அரசு மசோதாக்கள் எந்தப் பெரிய
விவாதங்களுமின்றிச் சடசடவென மன்றத் தொடரின் இறுதி நாட்களில் நிறைவேற்றி
முடித்துக் கொள்ளப்படுகின்றன.தேவையான ‘கோரம்’ இல்லாமல் சட்டங்களை
நிறைவேற்றுவதும் வாடிக்கையாகிவிட்டன.
இத்தனைக்கும் நமது நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அதிகாரங்களும், சலுகைகளும், ஊதியமும் ஏராளம்.
இப்படியான ஒரு சூழலில் கடந்த இருஆண்டுகளில் தமிழகச் சட்டமன்றத்தில் ‘மனித நேயமக்கள் கட்சி’யின் உறுப்பினர்கள் இருவரும் ஆற்றியுள்ள உரைகளின் தொகுப்பை வாசிக்கும்போது ஆறுதல் ஏற்படுகிறது. இருவருமே சட்டமன்றத்தின்கன்னி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ம.ம.கவின் சட்டமன்றத் தலைவர் பேராசிரியர்முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நாடறிந்த ஒரு அரசியல்வதி, தலைவர், மாணவப் பருவத்திலிருந்துஅரசியல் செயற்பாடுகளும், நீண்ட காலப் பேராசிரிய அனுபவமும் மிக்கவர். பொது வாழ்வில்நேர்மைக்குப் பெயர் பெற்றவர்.
தொண்ணூறுகளில் முஸ்லிம்கள் மத்தியில் empowerment
என்கிறகோரிக்கை மேலெழுந்தபோது முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டிற்கான
இயக்கம் ஒன்றை உருவாக்கி,பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து இறுதியில்
அதைச் சாதித்துக் காட்டியதில் முக்கியபங்காற்றியவர், முஸ்லிம்களின்
பிரச்சினைக்குள் மட்டும் முடங்கிவிடாமல் அனைத்து மக்களின்பிரச்சினைகள்
குறித்தும் கருத்துச் சொல்லத் தக்க ஆளுமையும் திறனும் உடையவர்.
அவ்வகையில்அனைத்து இயக்கங்களாலும் மதிக்கப்படுபவர்.
இந்த இரண்டாண்டுகளில் அவர் சட்டமன்றத்தில்தமிழக மக்களைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளை, குறித்தும் முக்கியமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியுள்ளார். இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவது,அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீடு பாதுகாக்கப்படுவதன் அவசியம், நிகர்நிலைப் பலகலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு முதலியன கடைபிடிக்கப் படாமை,
சித்த மருத்துவத்தைப்பாதுகாப்பதன்
அவசியம் மற்றும் சித்த மருத்துவக் கல்விக்குத் தற்போது ஏற்பட்டுள்ள
தடையைநீக்குவதற்கான வழிமுறைகள், கூடங்குளப் போராளிகள் மீதான வழக்குகளைத்
திரும்பப் பெறுதல்,தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடுதல் எனச் சகல
மக்களுக்குமான பொதுப் பிரச்சினைகளை முன்வைத்துப்பேசியதோடு அவர்
நிற்கவில்லை.
ஒரு முஸ்லிம் அல்லது தலித் சட்டமன்றஉறுப்பினருக்குக் குறைந்தபட்சம் மூன்று கடமைகள் உண்டு. ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் அவர் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும்; பொதுவான அரசியல்பிரச்சினைகளிலும் அவர் நிலைபாடு மேற்கொண்டு கருத்துச் சொல்லியாக வேண்டும்; தாம் ஒருசிறுபான்மைச் சமூகத்தவர் என்கிற வகையில் அந்தச் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளையும்அவரே முன்னெடுத்தாக வேண்டும்.
தி.முக,
அ.தி.மு.க அல்லது கம்டூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றில்உள்ள தலித் அல்லது
முஸ்லிம் உறுப்பினர்களால் இந்த மூன்றாவது பணியைத் திறம்படச் செய்யஇயலாது.
குறிப்பிட்ட பிரச்சினை குறித்து தான் சார்ந்துள்ள கட்சியின்
நிலைபாட்டைத்தான்அவர் பேச முடியுமே ஒழிய முஸ்லிம்கள் அல்லது தலித்களுக்கு
எது நல்லது என அவர் பேசிவிடஇயலாது. ஆனால் ஜவாஹிருல்லஹ் போன்ற
முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளத்துடன் கூடிய கட்சியைச்சார்ந்தவர்கள்
முஸ்லிம்களின் நலன்களை முன்வைத்துச் சுதந்திரமாக இயங்க இயலும். அந்த
வகையில் அவர் ஒரு தொகுதியின் பிரதிநிதியாக மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக
முஸ்லிம்மக்களின் பிரதிநிதியாகவும் சட்டமன்றத்தில் பணியாற்ற வேண்டியுள்ளது.
இதனூடாக அவரது பொறுப்பும் சுமையும் கூடுதலாகின்றன.
இந்த மூன்று பணிகளையும் அவர் செவ்வனே செய்து வருவதற்கான சான்றாக அவரது சட்டமன்ற உரைகள் அமைந்துள்ளன. முஸ்லிம் இட ஒதுக்கீட்டின்அளவை அதிகரிக்க வேண்டிய அவசியம், முலிம்களின் திருமணப் பதிவு குறித்துக் கொண்டுவரப்பட்டுள்ளசட்டத்தில் கண்டுள்ள சிக்கல்கள்,
வக்ஃப் வாரியத்திர்கு மானியம் அளிக்க வேண்டியதன் அவசியம்,ஓரியண்டல் பள்ளிகளின் தனித்தன்மையைக் காக்க வேண்டியதன் தேவை, கல்வி நிலையங்களுக்குச்சிறுபான்மை நிலை வழங்குவதிலுள்ள குளறுபடிகளை நீக்குதல், TAMCO மூலம் அளிக்கப்படும்உதவித் தொகைகளை அதிகரித்தல், மதம்மாறி வருபவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட பிரிவுச்சான்றளிப்பதன் உடனடி அவசியம் என ஒட்டு மொத்தமான முஸ்லிம்களின் கோரிக்கையை அவர் முன்வைக்கிறார்.
இன்னொருபக்கம் கச்சத் தீவுப் பகுதியில்நமது மீனவர்களின் உரிமையைப் பாதுகாத்தல், இலங்கைப் படைகளால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பதவி அளித்தல், கடல் அட்டை மீதான மீன்பிடித் தடையைநீக்குதல், இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைத்தலின் அவசியம், கடல் அரிப்புக்குத்தடுப்புச் சுவர் கட்டுதல், பாம்பன் கால்வாயைத் தூர் வாருதல், ராமேஸ்வரம் தீவுக்குப்பூமி அடியாகக் கேபிள்கள் மூலம் மின் சக்தி கொண்டுவருதல், புறவழிச்சாலை அமைத்தல் எனத்தொகுதிப் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கும் அழுத்தம் கொடுத்துப் பேசியுள்ளார். ராமேஸ்வரம்அதிக அளவில் மீனவர்கள் வாழும் தொகுதி என்பதால் மீனவர்களின் பிரச்சினையும் அவரது பேச்சுக்களில்முக்கியத்துவம் பெறுகின்றன.
ம.ம.கவின் இன்னொரு உறுப்பினரும்ஆம்பூர்த் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்துபவருமான அ.அஸ்லம் பாஷா அவர்களும் இவ்வாறு தொகுதிப் பிரச்சினை, முஸ்லிம்களின் பிரச்சினை பொதுப்பிரச்சினை என மூன்றிற்கும் முக்கியத்துவம்அளித்துப் பேசியுள்ளார்.
ம.ம.க ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்று. எனவே இவர்கள் “கூட்டணிதர்மத்திற்குள்” நின்று பேச வேண்டிய நிர்ப்பந்தத்தையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்தல், முந்தைய தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்களுக்குஅளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் அளவை அதிகப் படுத்துதல் முதலான சட்டமன்றப் பேசுக்கள்அழுத்தமாக அமைந்த போதும் ஜெயலலிதா அரசு அவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதையும்நம்மால் கவனிக்க முடிகிறது.
ஜனநாயக அரசில் சட்டமன்றம் மூலமாககோரிக்கைகளை வைப்பது நமது செயற்பாடுகளின் ஒரங்கம் மட்டுமே. அதனை மிகச் சிறப்பாக ம.ம.கவின்இரு உறுப்பினர்களும் செவ்வனே செய்துள்ளனர். பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஒரு முஸ்லிம்தலைவர் என்கிற நிலைக்கும் அப்பால் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலன்களையும் பிரதிபலிக்கும்தலைவராக மலர்ந்துள்ளமைக்கு அவரது சட்டமன்ற உரைகள் சாட்சியமளிக்கின்றன. சட்டமன்ற உரைகளால்சாதிக்க முடியாத கோரிக்கைகளை நாம் வீதியில் இறங்கித்தான் சாதித்தாக வேண்டும். அப்படியானபல போராட்டங்களை முன்னெடுத்த பாரம்பரியமிக்க த.மு.மு.கவின் வழிவந்தோர் அதற்கும் தயங்கார்என்பதை நாம் அறிவோம்.
Thanks (kiliyanur.net)